இந்த வலைப்பூ , இத்தனை ஜோடி கண்களால் வாசிப்பு

பேராசிரியர் பி.ஜி.கதிரவனின் வலைப்பூ

10/27/2009

காலம்


பூமியைக் காட்டி

சோறு ஊட்டுவார்களோ...?

நிலவில் குடியேறும்

குழந்தைக்கு .

காட்டி சோறு ஊட்ட

பூமி இருக்குமா ... ?

8/24/2009

தலைமுறை

மாலை நேரம் .
ஓய்வாகவும் , தளர்வாகவும் அமர்ந்திருந்தேன் .
துணைக்கு தேநீர் இருந்தது .
வரப்போகும் மகனுக்காக மாலை நேர டிபன் தயாரிப்பில் இருந்தாள் மனைவி .
"தொம் " என என் முன்னால் புத்தகப்பை வந்து விழுந்தது .
நிமிர்ந்து பார்த்தேன் .
ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகன் ஹரி .
" என்னடா ஹரி ...? "
" அப்பா ... நாளையில இருந்து நீ வேலைக்கு போக வேணாம் . வேலையை விட்டுரு ... "
கேள்விக்குறிகள் தொங்கும் கண்களுடன் கிச்சனிலிருந்து எட்டிப் பார்த்தாள் மனைவி .
" ஏண்டாஅப்படி சொல்ற ..? என்ன நடந்துச்சு ..? "
" உன்னால தினம் தினம் எனக்கு கெட்ட பேரு ...."
" என்ன கெட்ட பேரு .. "
" எங்க மிஸ் எதுக்கெடுத்தாலும் ' ஒரு புரபசரோட பையனா இருந்துக்கிட்டு இவ்வளவு மக்கா இருக்கியே ... ' ' ஒரு புரபசரோட மகனா இருந்துக்கிட்டு இவ்வளவு சேட்டை பண்ணுறியே ' ன்னு திட்டிக்கிட்டே இருக்காங்க . நீ புரபசரா இருக்கிறதுனால தான் இவ்வளவு பிரச்சனை . அதனால நீ இந்த புரபசர் வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போ .. என்னால திட்டு வாங்க முடியல ... "
கிச்சனிலிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது .

6/15/2009

இது பிரபாகரனாய் இல்லாமலிருக்கக் கடவது .


மே 17 ந்தேதி தமிழ் ஈழத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என்று செய்தி வந்ததில் இருந்து .... இன்று ஜூன் 17 ந்தேதி வரை ...... தினந்தோறும் வார , மாத ,இதழ்களிலும் இணைய தளங்களிலும் ... பிரபாகரன் பற்றிய செய்திகளை தேடி தேடி வாசித்துக் கொண்டு இருக்கிறேன் .

இது தான் பிரபாகரனின் உடல் என்று சிங்கள இராணுவம் வெளியிட்ட படங்களை உற்று உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறேன் .

நேற்று வரை புலிச்சாயம் பூசியிருந்த " புதினம் " இன்று சிங்கச்சாயம் பூச புறப்படுவதை பார்க்கிறேன் .

"இந்து " " தினமலர்" நாளிதழ்கள் தாங்களே புதைகுழி தோண்டி புலித்தலைவரை புதைத்து விட்டு வந்தது போல் பூரிப்பதை காண்கிறேன் .

ஆனான பட்ட " ஆனந்த விகடனும் " 'உண்டு ' 'இல்லை ' என எதுவும் சொல்லாமல் ஊமையாய் இருப்பதை உணர்கிறேன் .

"சிறுத்தைகள் " புலியாய் மாற முயற்சிப்பதையும் சுவரொட்டிகள் எனக்குசுட்டிக் காட்டுகின்றன .

" நெருப்பு " இணைய தளம் கங்குகளாய் வார்த்தைகளை கக்குவதையும் காண்கிறேன் .

வலி சுமந்த வர்க்கத்தினருக்கு வார்த்தைகள் தர முடியாத வருடலை " நக்கீரன் " வடிவமைத்த ஒரு புகைப்படம் தந்ததை புரிந்து கொள்கிறேன் .

அச்சு , ஒலி , காணொளி , என எல்லா வடிவ ஊடகங்களிலும் பிணங்களாய் ஆக்கப்பட்ட தமிழர்களை அறிய நேர்கிறேன் .

என்னால் செய்ய முடிவது எது என வெகு நேரம் யோசிக்கிறேன் .

சக தமிழனைப் போல சலனமற்று இருப்பதல்ல இதற்கு தீர்வு என்பது மட்டும் புலப்படுகிறது .

வலைப்பூவில் இதை வார்த்தைகளாய் இறக்கி வைப்பது என்னைப்போல் என்ன செய்வது என்று இதயம் பிசைகிற இளைஞர்களை இணைத்து ஒரே இதயமாய் உருவாக்க முடியுமா என்று ஒரு முயற்சி செய்யத்தான் .

3/21/2009

இலக்கியமாகும் வாழ்க்கை


நான்
தமிழ் இலக்கியம் படித்தவனில்லை .
ஆனாலும்
ஒவ்வொரு மாதமும்
குறுந்தொகையைப் பார்க்கிறேன் .
என் சம்பள வடிவில் .

மிகப் பெரியது




யாசகம் கேட்கிறது யானை .
பயமுறுத்தினால்
இதை விட
அதிகமாக கிடைக்கும் எனத்தெரிந்தும் .







3/16/2009

மின் புத்தகமாக சிற்றிதழ்கள்

பல ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த தமிழ் சிற்றிதழ்கள் மின் புத்தக வடிவில் கிடைக்கின்றன . இலவசமாக பதிவிறக்கம் செய்ய ....

http://www.thamizham.net

3/13/2009

கையறு நிலை

போன மாதத்தை விட இந்த மாதம் அரிசி விலை கிலோவுக்கு நாலு ரூபாய் ஏறி விட்டது .

போன மாதத்தை விட இந்த மாதம் எண்ணை விலை லிட்டருக்கு பத்து ரூபாய் ஏறி விட்டது .

போன மாதத்தை விட இந்த மாதம் சோப்பு விலை இரண்டு ரூபாய் ஏறி விட்டது .

போன மாதத்தை விட ......

ம் ச் ... என்ன சொல்ல .... ?

பேசாமல் போன மாதத்திலேயே இருந்திருக்கலாம் .

இப்படித்தான் போன மாதமும் நினைத்தேன் .

2/24/2009

கை விரல்களில் ஒன்பதாம் வாய்பாடு

இரு கை விரல்களையும் நீட்டிக் கொள்ளுங்கள் .
உள்ளங்கைகள் வானம் பார்த்து இருக்கட்டும் .
ஒன்றையும் ஒன்பதையும் பெருக்கினால் எவ்வளவு என்று அறிந்து கொள்ள
நீட்டியிருக்கும் இரு உள்ளங்கைகளில் இடது கையின் பெரு விரலை ( அதாவது முதல் விரல் ) மடக்கிக் கொள்ளுங்கள் . மீதி இருக்கும் விரல்கள் ஒன்பது . அது தான் விடை .
இரண்டையும் ஒன்பதையும் பெருக்கினால் எவ்வளவு என்று அறிந்து கொள்ள
நீட்டியிருக்கும் இரு உள்ளங்கைகளில் இடது கையின் ஆள்காட்டி விரலை மட்டும் ( அதாவது இரண்டாவது விரல் ) மடக்கிக் கொள்ளுங்கள் . மீதி இருக்கும் விரல்கள் .......மடக்கப்பட்டு இருக்கும் விரலுக்கு இந்த பக்கம் இருக்கும் விரல்கள் ஒன்று , அந்த பக்கம் இருக்கும் விரல்கள் எட்டு . இரண்டையும் அருகருகே எழுதினால் பதினெட்டு . அது தான் விடை .

மூன்றையும் ஒன்பதையும் பெருக்கினால் எவ்வளவு என்று அறிந்து கொள்ள நீட்டியிருக்கும் இரு உள்ளங்கைகளில் இடது கையின் நடுவிரலை மட்டும் ( அதாவது மூன்றாவது விரல் ) மடக்கிக் கொள்ளுங்கள் . மீதி இருக்கும் விரல்கள் .......மடக்கப்பட்டு இருக்கும் விரலுக்கு இந்த பக்கம் இருக்கும் விரல்கள் இரண்டு , அந்த பக்கம் இருக்கும் விரல்கள் ஏழு . இரண்டையும் அருகருகே எழுதினால் இருபத்து ஏழு . அது தான் விடை .

நான்கையும் ஒன்பதையும் பெருக்குவதற்கு நாலாவது விரலை மடக்கி ...... மடக்கப்பட்டு இருக்கும் விரலுக்கு இந்த பக்கம் இருக்கும் விரல்களையும் , அந்த பக்கம் இருக்கும் விரல்களையும் அருகருகே எழுதினால் முப்பத்து ஆறு . அது தான் விடை .

இப்படியே .....ஐந்தையும் ஒன்பதையும் பெருக்குவதற்கு ஐந்தாவது விரலை யும்
.... ஆறையும் ஒன்பதையும் பெருக்குவதற்கு ஆறாவது விரலை யும் மடக்கி ... மீதி இருக்கும் விரல்களைக் கொண்டு விடை அறியலாம் .

ஆனால் கை விரல்களைக் கொண்டு பத்து தடவை மட்டுமே பெருக்க முடியும் .
அதற்கு மேல் பெருக்க ........ ?

இருக்கவே இருக்கிறது கால் விரல்கள்.

..... பிரியங்களுடன் ...பி. ஜி. கதிரவன்

2/16/2009

நான் கடவுள் - விமர்சனம்

மூன்றாண்டு காலம் எடுக்கப்பட்டு ...
மூச்சு திணற வைக்கிற பிரச்சினைகளை க்கடந்து வருகிற படம் என்பதால் இயல்பாகவே படம் பார்க்கிற ஆர்வம் அதிகமிருந்தது .
தொலைக்காட்சிகளில் முன்னோட்டங்கள் காட்டப்பட்ட போதே தெரிந்து விட்டது
படம் தீவிர போக்கு கொண்ட படமாக இருக்கும் என்று .
நினைத்த படியே , ருத்ரனையும் , தாண்டவனையும் பற்றிய
ருத்ர தாண்டவ படம் இது .


முதல் காட்சியிலேயே நாமும் காசியில் இருப்பது போல ஒரு ஐக்கிய உணர்வு
உருவாக செய்து விடுவது இணைந்திருக்கிற கலைஞர்களின் வலிமை .
பழைய பாடல்களின் பால் பாலாவிற்கு இருக்கிற ஈர்ப்பு "பிதா மகனை " த்தொடர்ந்து இதிலும் வெளிப்பட்டிருக்கிறது .


பொதுவாக பாலாவின் படங்களில் கதாநாயகனுக்கும் , கதா நாயகிக்கும் "டூயட் "
இருந்ததே கிடையாது .
என்றாலும் இருவரும் சந்திப்பார்கள் , யாராவது ஒருவர் காதல் உணர்வு கை வரப் பெறுவார்கள் .
இதில் அதற்கும் வாய்ப்பு இல்லை .


பதினான்கு வருடங்களுக்கு முன்னால் காசியில் கை விட்டு வந்த மகனை , அவன் வளர்ந்து ,
"இறந்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு " மோட்சமும் மறுபிறவியில் இருந்து விடுதலையும் தருகிற "அகோரி " ஆனபிறகு , சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார் தந்தை .
அவன் இங்கு வந்து ,உறவுகளில் இருந்து ஒதுங்கி ,கஞ்சா புகைத்தபடி , வாழ தகுதி இல்லாத இருவருக்கும் , வாழ விரும்பாத கதா நாயகிக்கும் " உயிர் விடுதலை " தந்து விட்டு மறுபடியும் காசிக்கே திரும்பி விடுவது தான் கதை .


" நான் கடவுள் " என்கிற தலைப்பை பார்த்தவுடன்
"கடவுள் என்பவர் வெளியில் வேறெங்கேயோ இல்லை . தனக்குள் தான் இருக்கிறார் " என்பதை ஒவ்வொரு மனிதனும்உணரும் விதத்தில் எடுக்கப் பட்ட படமாக இருக்கும் என நினைத்து படம் பார்க்கப் போனால் ஏமாற்றேமே உங்களை எதிர் கொண்டழைத்து வரவேற்று உபசரிக்கும் .
இது.........." தானே கடவுள் "என்று நினைக்கிற ஒரு தனி மனிதனின் கதை .


படத்தில் கடவுளாக தன்னை உணருகிற , பாவிக்கிற , ஆர்யாவுக்கான வசனங்களை ஒரு வெள்ளைத்தாளில் அரைப் பக்கத்தில் எழுதி விடலாம் .
பெரும்பாலும் காட்சிகளாலேயே ரசிகர்கள் வழி நடத்த படுகிறார்கள் .
ஆர்யா குளிக்கிற காட்சிகள் உண்டு ; புகைக்கிற காட்சிகள் உண்டு ; உணவருந்துகிற காட்சிகள் மட்டும் இல்லையே ............ஏன்..? என்று யோசித்தேன் . பிறகு தான் தெரிந்தது . "அகோரிகள் " மனித மாமிசம் சாப்பிடுகிறவர் என்று . படத்தில் ஆர்யா ஒரு அகோரி . எனவே , அவர் சாப்பிடும் காட்சிகளை சென்சாரின் நாக்குகள் சாப்பிட்டு இருக்கலாம் .
இன்னொரு முக்கியமான விஷயம் .
நாம் இப்போது சன் டிவி யுகத்தில் வாழ்கிறோம் .
இந்த யுகத்தில் ஒரு படம் வெற்றி பெற அதன் பாடல்களை தினந்தோறும் இருபது முறை தொலைக் காட்சியில் காட்ட வேண்டும் .
நகைச்சுவை காட்சிகளை மறுபடி மறுபடி போட்டு காட்டி கொண்டே இருக்க வேண்டும் .
நான் கடவுள் படத்திற்கு இந்த இரண்டையுமே செய்வது இயலாது .
இருக்கிற " மாதா உன் கோவிலில் ..." பாடலையும் ஆப்பரேட்டர்கள்அவர்களாகவே வெட்டி தள்ளி விடுகிறார்கள் .
எனவே இந்த படம் பிரமாண்ட வெற்றியை (?) அடைவது சந்தேகமே .


இந்த படத்தில் ஒரு நெருடலான விஷயம் என்னவென்றால் , ஆர்யா ...... வாழ தகுதி இல்லாத இருவரை மட்டுமே , அதுவும் அவர்களாக தேடி வந்து வம்பிழுத்த பிறகே அழிக்கிறார் . மீதி .... ? கடவுளுக்கே வெளிச்சம் .


பாலாவின் முயற்சி புதிதாக இருந்தாலும் ஒரு முழு திரைப்படம் பார்த்த உணர்வு ஏற்படாதது இந்த படத்தின் குறைபாடே என்பது என் தனிப்பட்ட கருத்து .

2/15/2009

செய்ய வேண்டியது

கடலை இறைத்து

காய வைக்கும் கனவுகளோடு

கரையிலேயே நின்றிருக்கும்

என் சக இளைஞர்களே ....

படகுகள் செய்ய பழகிக் கொண்டால்

பயணமும் செய்யலாம் .

பசியும் தணிக்கலாம் .

பிறகு ... கடலும் உங்களுக்காக வற்றும்.

பூமியும் உங்களையே சுற்றும்.

.....பி. ஜி. கதிரவன்

இயல்பு

நாட்டாமை பதவியை
நாய்களுக்கு கொடுத்தால்
கண்ட இடங்களில்
காலைத் தூக்கத் தானே செய்யும் .

...பி.ஜி.கதிரவன் .

ஹைக்கூ

விபத்துக்குள்ளானது ஒரு சைக்கிள் .
பலியானதோ நூறு உயிர்கள் .
கூடை நிறைய கோழி குஞ்சுகள் .
....பி. ஜி. கதிரவன் .

இலக்கு

குளத்தில்
மீன் இல்லாமல் போகலாம் .
ஒருவேளை
நீர் இல்லாமலும் போகலாம் .
ஆனாலும்
குளக்கரையின் தூண்டில்கள்
எப்போதும்
நம்முடையவைகளாக இருக்க வேண்டும் .
...... பி . ஜி. கதிரவன்

ஹைக்கூ

அனுமதி தந்தும் உள்ளே வராமல்

கதவைத் தட்டிக்கொண்டே இருக்கிறது .

காற்று .

........ பி . ஜி . கதிரவன்

இனிய நண்பர்களே ...
கதிரவனின் கை கூப்பல்கள் .
மிக சமீபத்தில் தான் நான் இணைய தளங்களில் மேயப் பழகினேன் .
குறிப்பாக எழுத்தாளர் ராம கிருஷ்ணனின் இணையதளத்திற்கு சென்று அவரின் எழுத்துக்களை மிக ஆர்வமாக வாசித்தேன் .
பற்றுக்கொடி கிடைத்த பின் படர்கொடி சும்மா இருப்பதில்லையே ..
அது போல
வேறு இணைய தளங்கள் உண்டா என தேடி அலைந்து
அம்பலம் , கிறுக்கல் , வீணாப்போனவன் , ரசனைக்காரன் , என
இணைய தளங்களில் என் மேய்ச்சல் பரவலானது.
கல்லூரி ஆசிரியனாக பணியாற்றி வந்தாலும் ,
வணிகவியல் துறையைச் சார்ந்தவனாக இருந்தாலும்
படைப்பு இலக்கியங்களின் பால் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருந்தேன் .
கல்லூரியில் இளங்கலை வணிக வியல் படிக்கிற காலத்திலேயே
" இளைய ரோஜா " என்ற மாத இதழை அச்சில் வெளியிட்டு வந்தேன் .
பிறகு வானொலியில் கவிதைகள் வாசிக்கவும் , செயற்கைக்கோள் தொலைக் காட்சிகளின் பேச்சரங்கங்களில் பங்கு பெறவும் துவங்கினேன் .
பிறகு கவிதை புத்தகங்கள் வெளியிட , தொகுப்பு நூல்கள் வெளியிட துவங்கினேன் .
சொந்த பதிப்பகம் வாயிலாக பாட புத்தங்களும் வெளியிட ஆரம்பித்தேன் .
திரைப்படம் என்பது என்னை பொறுத்த வரை ஒரு மிகப்பெரிய வகுப்பறை .
அந்த வகுப்பறையில் ஆசிரியப்பணி கிடைக்குமா என அலைந்து கொண்டிருக்கிறேன் .
அதற்காக " என்ன ராசா செய்தாய் ?" என்று கேட்டால்
" கீதையை பின்பற்றுகிறேன் " என்பதே என் பதிலாக இருக்கும் .
புரியவில்லையா..?
கீதை சொல்கிறது .
" நீ எதை நினைக்கிறாயோ ... அதுவாகவே மாறி விடுகிறாய் ."
நான் திரைத்துறையில் நுழைய வேண்டு மென்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன் .
நுழைந்த பின் பயன் படுத்துவதற்கு நிறைய சரக்குகள் சேமித்து வைத்து இருக்கிறேன் .
இதுவே நான் .
இந்த சூழ்நிலையில் நமக்கென ஒரு இணைய தளம் துவக்கினால் என்ன என்று தோன்றியது .
அப்போது தான் கிறுக்கல் வாயிலாக இலவசமாக வலைப்பூ துவங்க வாய்ப்பு இருப்பது தெரிந்து
இங்கு வந்து சேர்ந்தேன்.
இந்த பக்கங்களில் நான் எழுதியிருப்பவை எல்லாம் வலைப்பூ எப்படி செயல் படுகிறது
என தெரிந்து கொள்ள நான் எழுதிய சுய விவரங்கள் .
இனி என் படைப்புக்கள் வரிசையாக வலம் வரத்துவங்கும் .
நன்றி . கதிரவன் .பி .ஜி

பின்பற்றுபவர்கள்